ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

By காமதேனு

10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வரும் 9-வது ஆசிய விளையாட்டு போட்டியில், 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை வென்றது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் 'சுட்டு' தந்தனர். பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. 1896.5 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவிலும் அரியானாவைச் சேர்ந்த 19 வயதான ரமிதா பதக்கமேடையில் ஏறினார். அவர் 230.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார். இவர் சென்னையில் நேகா சவானிடம் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மெகுலி கோஷ் 208.3 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு சரிந்தார்.

துடுப்பு படகு போட்டியில் 'டபுள்ஸ் ஸ்கல்' பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங் ஜோடி 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 28.18 வினாடிகளில் எட்டிப்பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது. இதேபோல் துடுப்பு படகு ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ் - லேக் ராம் இணை (6 நிமிடம் 50.41 வினாடி) வெண்கலப்பதக்கத்தை பெற்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம் 8 பேர் கொண்ட அணியினர் துடுப்பு படகை செலுத்தும் பந்தயத்தில் இந்தியா 2 ஆயிரம் மீட்டர் இலக்கை 5 நிமிடம் 43.01 வினாடிகளில் 2-வதாக கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

இந்த நிலையில் இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. ருத்ரான்ஷ் பட்டேல், திவியன்ஷ பன்வார், ஜஸ்வரி தோமர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி. ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது இந்திய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE