தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிட்ட 26 பேருக்கு இவ்வாண்டிற்கான அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேசிய விளையாட்டு விருதுகள் ஒவ்வொரு ஆண்டும், விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கவும், அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியார் விருதும், விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதாளர்கள் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவருமான கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர், 24 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்திருந்தார். உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்ற அவர், ஒரே உலக கோப்பையில் 2 முறை 5 விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, சதுரங்கம், கிரிக்கெட், குதிரை ஏற்றம். கோல்ஃப், கபடி, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், கோ-கோ, டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், வுஷு, பாரா வில்வத்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2022-ம் ஆண்டில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருது, லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (சதுரங்கம்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவருக்கர் (மல்லக்காம்ப்) ஆகிய 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்கான தயாந்த் சந்த் விருது, மஞ்சுஷா கன்வர் (பூப்பந்து), வினித் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி) ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதுகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுனா விருது பெறுவோர் பட்டியல்
1. ஓஜஸ் பிரவின் டியோடலே (வில்வித்தை)
2. அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
3. ஸ்ரீசங்கர்.எம் (தடகளம்)
4. பருல் சவுத்ரி (தடகளம்)
5. முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
6. ஆர்.வைஷாலி (சதுரங்கம்)
7. முகமது ஷமி (கிரிக்கெட்)
8. அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
9. திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி கலை)
10. திக்ஷா தாகர் (கோல்ஃப்)
11. கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
12. புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி)
13. பவன் குமார் (கபடி)
14. ரிது நேகி (கபடி)
15. நஸ்ரின் (கோ-கோ)
16. பிங்கி (லான் பவுல்ஸ்)
17. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கிச் சூடு)
18. இஷா சிங் (துப்பாக்கிச் சூடு)
19. ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
20. அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
21. சுனில் குமார் (மல்யுத்தம்)
22. ஆன்டிம் (மல்யுத்தம்)
23. நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)
24. ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)
25. இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்)
26. பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)
இதையும் வாசிக்கலாமே...
எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
நிவாரணப் பொருட்களை அனுப்ப கட்டணம் கிடையாது... தமிழக அரசு அறிவிப்பு!
மாரடைப்பால் 7-ம் வகுப்பு மாணவி பலி: பள்ளி செல்லும் போது நடந்த பரிதாபம்!
குளியலறையில் ரகசிய கேமரா: மாணவிகள் அதிர்ச்சி!
வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட மறுத்த அமைச்சர்... 'இனி ஓட்டு கிடையாது...' கொந்தளித்த மக்கள்!