ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அதிகாரபூர்வ கீதம் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு இளம் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபர் 5 அன்று இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான மோதலுடன் 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்க உள்ளது. முன்னதாக ஐசிசி செயலர் ஜெய்ஷா, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்து ஐசிசி போட்டிகளைத் தரிசிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.
இந்த எதிர்பார்ப்பின் அடுத்த கட்டமாக ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அதிகாரபூர்வ கீதமாக ‘தில் ஜாஷ்ன் போலே’ என்ற இந்தி பாடல் வெளியாகி உள்ளது. ப்ரீதம் இசையில், பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் பிரதானமாக தோன்றுகிறார். உடன் இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவியான நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற வேண்டிய இந்த பாடலுக்கு எதிராக, அதிருப்தி அலையும் ஆங்காங்கே எழுந்து வருகிறது. ’வழக்கமான பாலிவுட் சினிமா பாடலாக மட்டுமே இந்த அதிகாரபூர்வ கிரிக்கெட் கீதம் அமைந்துள்ளது’ என்றும், ’உலகம் கொண்டாடக்கூடிய விளையாட்டுப் போட்டியை நினைவூட்டுவதாக இது அமையவில்லை’ என்றும் அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் முந்தைய ஐசிசி உலக்கோப்பை போட்டிகளின் கீதங்களை நினைவுகூர்ந்தும் தங்களது அதிருப்தியை அவர்கள் ஏக்கமாக பதிவு செய்து வருகின்றனர். ’ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும்; நாள்போக்கில் ரசனைக்குரியதாக இந்த பாடல் அமைந்துவிடும்’ என வேறு சில அனுபவ ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.