பாரீஸ் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் நடுவர் மன்ற (ஜூரி) உறுப்பினராக தேர்வாகியுள்ள முதல் இந்தியராக ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பில்கிஸ் மிர் பெருமைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளன. இப்போட்டிக்கான நடுவர் மன்ற உறுப்பினராக இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த பில்கிஸ் மிர் என்ற பெண் தேர்வாகியுள்ளார்.
இந்த தகவலை, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், “நீர் விளையாட்டை ஊக்குவிப்பவர், டெவலப்பர், தடகள வீராங்கனை, இந்திய கயாக்கிங், கேனோயிங் (துடுப்பு படகு) சங்க நடுவர் குழு உறுப்பினரான பில்கிஸ் மிர், பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடுவர் மன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் நடுவர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய வீராங்கணை இவர் ஆவார்” என தெரிவித்துள்ளது.
நடுவர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பில்கிஸ் மிர், “இது எனக்கோ, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கோ மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம். பாரீஸ் ஒலிம்பிக்கில் அற்புதமான நடுவர் மன்றத்தில் உறுப்பினராக நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதை ஒரு கவுரவமாக கருதுகிறேன்.
ஹாங்க்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடுவர் மன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இது எனது முயற்சிக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; விளையாட்டில் சிறந்து விளங்க விரும்பும் அனைத்து பெண்கள் மற்றும் மகளிருக்கு கிடைத்த வெற்றியாகும். ஆசியாவிலிருந்து இரண்டு நடுவர் மன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த முறை கோடைகால விளையாட்டுகளுக்கு நடுவர் மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நான்; மற்றொருவர் ஜப்பானைச் சேர்ந்தவர்.
கடந்த 1998ம் ஆண்டில், தால் லேக்கில் இருந்து ஒரு கேனோயிஸ்டாக எனது வாழ்க்கையைத் தொடங்கினேன. அப்போது ஒரு பெண் டிராக்சூட் அணிவது கூட சவாலாக இருந்தது. 12 ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீர் சார்பில் தேசிய போட்டிகளில் பங்கேற்றேன். அதன் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நாட்டிற்காக பங்கேற்றேன். நான் 10 ஆண்டுகள் பெண்கள் தேசிய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தேன். 2008ம் ஆண்டில் ஜெர்மனியில் நடுவர் மன்ற உறுப்பினர் தேர்வுக்கு தகுதி பெற்றேன். அங்கு நான் இரண்டாவது சிறந்த நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்” என்று தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!
இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சதி... பாகிஸ்தானியர் உள்பட மூவர் கைது!
பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை... அதிர விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்!
அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்... விரட்டியடித்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்!