ஆசியக் கோப்பை கிரிக்கெட் : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

By காமதேனு

இலங்கை அணியை வீழ்த்தியதை அடுத்து இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, தொடக்கத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்தது. 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பிறகு வந்த இலங்கை வீரர் துனித் வெல்லாலகே ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

முதல் பந்திலேயே சுப்மன் கில்-ஐ போல்டாக்கிய அவர், அடுத்து விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெல்லாலகேவின் சுழற்பந்து வீச்சால் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். பின்னர் கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகிய இருவரும் அணியை சற்றே சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் அவர்களின் பார்ட்னர்ஷிப்பையும் பிரித்தார் வெல்லாலகே. ராகுல் 39 ரன்களில் வெளியேறினார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அக்சர் படேல் பங்களிப்பால் இந்தியா 200 ரன்கள் கடந்தது. முடிவில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து விளையாடிய இலங்கை வீரர்களால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியவில்லை. இலங்கை 99 ரன்கள் எடுத்திருந்த போது 6 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, தனஞ்செயா டி சில்வாவும், வெல்லாலகேவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனாலும் அவர்களால் அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை. இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன் மட்டும் எடுத்தது. இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் தலா 2 புள்ளியுடன் உள்ள பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE