ஐபிஎல் போட்டிகளில் தனது இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் நிரப்புவார் என நம்புவதாக தல என அன்பாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை நடைபெற்ற போட்டிகளில், இரண்டு போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, இரண்டிலும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இரண்டு போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டிலும் தோல்வியைத் தழுவி 9-வது இடத்திலும், ஒரு போட்டியில் விளையாடி, அதிலும் தோல்வி அடைந்த லக்னோ அணி 10-வது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்ஸி குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய மகேந்திர சிங் தோனி, எனது இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் நிரப்புவார் என நம்புகிறேன். நான் மைதானத்தில் பெரிதும் ரியாக்ட் செய்யும் ஆள் கிடையாது, குறிப்பாக யாராவது அவர்களது முதல் அல்லது இரண்டாவது போட்டியில் விளையாடும்போது கண்டு கொள்ளமாட்டேன். ருதுவும் அதேபோல தான் என நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.