ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெறுகிறது.
ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தான், நேபாளம் வெளியேறியதை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. லீக் சுற்றில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனவே இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். இந்நிலையில் இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று போட்டி நடைபெறுகிறது.
பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டால், எங்கு நிறுத்தப்பட்டதோ, அதே இடத்தில் இருந்து நாளை போட்டி மீண்டும் தொடங்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.