2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று ஆடி வரும் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சஞ்சு சாம்சன் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராக அணியில் இடம் பெற்றார். அதாவது, ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதில் இவரை அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளும். இந்த வாய்ப்பு சாம்சனுக்கு கிடைக்க முக்கிய காரணம் கே.எல்.ராகுல் தான். அவர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், அவர் காயம் முழுமையாக குணமாகும் முன்பே ஆசிய கோப்பை தொடருக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் சில போட்டிகளில் அவர் பங்கேற்கவும் இல்லை. அந்த சில போட்டிகளில் ராகுலுக்கு ஒரு மாற்று வீரராக உத்தேச அணியில் ஒரு வீரராக மட்டுமே சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார். அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. தற்போது கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து அணியில் இணைந்துவிட்டார். செப்டம்பர் 10 அன்று நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அவர் பங்கேற்க இருக்கிறார்.
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் இனி அணியில் மாற்று வீரராக இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது பிசிசிஐ. இது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க கடந்த ஒன்பது ஆண்டுகளாக போராடி வருகிறார் சஞ்சு சாம்சன்.
2014ம் ஆண்டே இந்திய அணியில் இடம் பிடித்த அவர் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகிறார். அதே சமயம், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியும், கேப்டனாக பாராட்டும் வகையில் செயல்பட்டும் தான் திறமையை நிரூபித்து வருகிறார். இதனால் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறத் துவங்கினர். அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக பிசிசிஐ வேறு வழியின்றி சில தொடர்களில் சஞ்சு சாம்சனை மாற்று வீரராக அறிவித்து விமர்சனங்களில் இருந்து தப்பி வருகிறது.