டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி ஆதிக்கம்

By KU BUREAU

துபாய்: இந்தியா - வங்கதேசம் மற்றும் இலங்கை - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் புதுபிக்கப்பட்டுள்ளது. இதில் சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 71.67% வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆஸ்திரேலிய அணி (62.50%) 2-வது இடத்தில் உள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான காலே டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 50% வெற்றி சராசரியுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 4 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை எட்ட வேண்டுமானால் நியூஸிலாந்து அணியை மீண்டும் ஒரு முறை வீழ்த்த வேண்டும்.

மேலும் அடுத்து நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். இது நிகழ்ந்தால் இலங்கை அணி அதிகபட்சமாக 69.23% சராசரி வெற்றியுடன் இறுதிப் போட்டியில் கால்பதிக்கக்கூடும். இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த வங்கதேச அணி (39.29%) 4-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE