அகில இந்திய ஹாக்கி போட்டி: சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் வெற்றி

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்து வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வெற்றிப் பெற்றது.

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 13-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நேற்று தொடங்கின. கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்து 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

போட்டியின் 2-வது நாளான இன்று காலை 7 மணிக்கு சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணியும், கர்நாடகா ஹாக்கி பல்லாரி அணியும் மோதின. போட்டிகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் 2:1 என்ற கோல் கணக்கில் சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வெற்றிப் பெற்றது.

13-வது நிமிடத்தில் கர்நாடகா ஹாக்கி பல்லாரி அணி வீரர் ஹச்.எம்.அனந்த் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார். 37-வது நிமிடத்தில் அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.

54-வது நிமிடத்தில் அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார். இந்த ஆட்டத்துக்கு சுப்பையா தாஸ் மற்றும் முனவர் பாஷா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ்க்கு சிறந்த ஆட்டக்காரர் விருது வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE