வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு: இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 6 விக்கெட்கள் தேவை

By KU BUREAU

சென்னை: ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரது அதிரடி சதத்தால் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் குவித்தது. அஸ்வின் 113, ஜடேஜா 86ரன்கள் விளாசினர். அதேவேளையில் வங்கதேச அணி 47.1 ஓவரில் 149 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 23 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. ஷுப்மன்கில் 33, ரிஷப் பந்த்12 ரன்களும் எடுத்துகளத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

மெஹிதி ஹசன் வீசிய 30-வதுஓவரில் ஷுப்மன் கில், லாங் ஆன் திசையில் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதேவேளையில் ரிஷப் பந்த், மெஹிதி ஹசன் வீசிய 40-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசினார். தொடர்ந்து ஹசன் மஹ்முத் வீசிய 48-வது ஓவரின் கடைசி பந்தை ரிஷப் பந்த், ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசியது ரசிகர்களை கவர்ந்தது.

மட்டையை சுழற்றிய ரிஷப் பந்த் 124 பந்துகளில், 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் தனது 6-வதுசதத்தை விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த அவர், 128 பந்துகளில், 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் விளாசிய நிலையில் மெஹிதி ஹசன் பந்தில்அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் - ஷுப்மன் கில் ஜோடி 217 பந்துகளில் 167 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து கே.எல்.ராகுல் களமிறங்கினார்.

ஷுப்மன் கில் 161பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 5-வது சதமாக அமைந்தது. இந்தியஅணி 64 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது ஷுப்மன் கில் 176 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 119 ரன்களும், கே.எல்.ராகுல் 22 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச அணி தரப்பில்மெஹிதி ஹசன் 2 விக்கெட்களையும் தஸ்கின் அகமது, நஹித் ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 515 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணிக்கு ஜாகீர் ஹசன், ஷத்மான் இஸ்லாம் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு 16.2 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்த இந்தஜோடியை பும்ரா பிரித்தார். ஜாகிர்ஹசன் 47 பந்துகளில், ஒரு சிக்ஸர்,5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில்,கல்லி திசையில் நின்ற ஜெய்ஸ்வாலின் அற்புதமான கேட்ச் காரணமாக வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ, அஸ்வின் வீசிய 20-வது மற்றும் 26-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர் விளாசினார்.

ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 86 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. அப்போதுசிறப்பாக விளையாடி வந்த ஷத்மான் இஸ்லாமை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்து திருப்பு முனையைஏற்படுத்தினார். ஷத்மான் 68 பந்துகளில், 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஷுப்மன்கில்லின் அபாரமான கேட்ச்சால் நடையை கட்டினார். தொடர்ந்து மொமினுல் ஹக்கை (13) போல்டாக்கியதுடன் நங்கூரமிட்டு விளையாடக்கூடிய முஸ்பிகுர் ரஹிமையும் (11) பெவிலியனுக்கு திருப்பினார் அஸ்வின்.

திடீரென வங்கதேச அணி சரிவை சந்தித்த போதிலும் சீராகரன்கள் சேர்த்த நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 55 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது 4-வது அரை சதத்தை கடந்தார். வங்கதேச அணி 37.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஷான்டோ 51 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின்3 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 357 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது வங்கதேச அணி.

தோனி சாதனை சமன்: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் சதம்விளசினார். இது அவருக்கு 6-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் அதிகசதம் விளாசியிருந்த முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை,ரிஷப் பந்த் சமன் செய்தார். தோனியும் டெஸ்ட் போட்டியில் 6 சதங்கள் விளாசியிருந்தார்.

அஸ்வின் சாதனை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 4-வது இன்னிங்ஸில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் அவர், 3 விக்கெட்கள் கைப்பற்றியதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர், 4-வது இன்னிங்ஸில் மட்டும் இது வரை 96 விக்கெட்கள் கைப்பற்றி யுள்ளார். இந்த வகையில் அனில் கும்ப்ளே 94 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதனை அஸ்வின் முறியடித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் இமாலய இலக்கு.. சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு இந்தியா 515 ரன் களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்ச மாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இதுவாகும். இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 482 ரன்களை இலக்காக கொடுத்திருந்தது இந்திய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE