கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடியில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம்!

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில், ஹாக்கி மைதானம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவையில் ஹாக்கி விளையாட்டுக்கு சில மைதானங்கள் இருந்தாலும், அவை கல்வி நிலையங்களை சார்ந்தே உள்ளன. ஹாக்கி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று கோவையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்காக ஆர்.எஸ்.புரம் ஆரோக்கிய சாமி சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2014ம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. அப்போதைய நிலவரப்படி ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் 100 மீட்டர் நீளம், 55 மீட்டர் அகலத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

2016-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கி, பின்னர் நிறுத்தப்பட்டது. ஹாக்கி மைதானம் அமைக்க கொண்டு வரப்பட்ட புல்வெளி தளம் உள்ளிட்ட பொருட்களும் வீணாகின. பின்னர், ரூ.19.50 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் ஹாக்கிமைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம்,ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படஉள்ளதால், ஹாக்கி மைதானத்துக்கான நிதி ஆதாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி தற்போது இத்திட்டத்துக்கு நிதி ஆதாரம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் கூறும்போது, ‘‘ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள மைதானத்தில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் ரூ.9.67 கோடிமதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு நகராட்சி நிர்வாகத்துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மாநகராட்சியின் கல்வி நிதியைபயன்படுத்தி இத்திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு ஹாக்கி தளம், இருபுறமும் பார்வையாளர்கள் அமரும் மாடம், வீரர்கள் உடை மாற்றும் அறைகள், குடிநீர் வசதி, கழிப்பிடவசதி, வாகனம் நிறுத்துமிட வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். மேலும், பிரதான ஹாக்கி மைதானத்தை போன்று, வீரர்கள்பயிற்சி மேற்கொள்ள இதன் அருகே ‘மினி’ ஹாக்கி மைதானமும்அமைக்கப்படும்.

தற்போது திட்டப்பணியை மேற்கொள்ள தகுந்த நிறுவனத்தை தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE