பாகிஸ்தான் சென்ற பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா!

By காமதேனு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தினாலும், இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது. இதன் காரணமாக இந்தியா விளையாடும் போட்டிகளும், இறுதி போட்டியும் இலங்கையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியைக் காண இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இதை ஏற்றுக் கொண்ட இருவரும் 2 நாள் பயணமாக, பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றனர். அங்கு இருவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் வரவேற்றார்.

இந்த பயணம் குறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா, ஆசிய கோப்பை போட்டியை காண மட்டுமே சென்றுள்ளதாகவும், வேறு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில் இந்த பயணத்தைத் தொடர்ந்து, இலங்கை சென்று போட்டிகளை காண உள்ளதாக கூறினார். மேலும், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவது என்பது இந்திய அரசின் முடிவினை பொருத்தது என்றார். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம் என்றும் கூறியுள்ளார். இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு விருந்தில் முக்கிய நிர்வாகிகளுடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE