வங்கதேசத்தை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா - டெஸ்ட் போட்டியில் தெறிக்கவிட்ட பும்ரா!

By KU BUREAU

சென்னை: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இன்று இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 9.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்களில் தடுமாறியது. பின்னர் ரிஷப் பந்த் மற்றும் ஜெய்ஸ்வால் ஓரளவு சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் பந்த் 52 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், கே.எல். ராகுல் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 42.2 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து நிலைகுலைந்தது.

இந்த நேரத்தில் ரவிச்சந்திரன் அஷ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்வின் சிறப்பாக ரன்களை குவித்தார். மறுமுனையில் ஜடேஜாவும் ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 102 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தபோது முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா வந்த கொஞ்ச நேரத்திலேயே அவுட் ஆனார். அவர் இன்று ஒரு ரன்கூட எடுக்கவில்லை. இதன்பின் வந்த ஆகாஷ் தீப் 17 ரன்களில் விக்கெட்டானார். அஸ்வின் 113 ரன்களும், பும்ரா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வங்கதேசத்தின் ஹசன் மஹ்மூத் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் சட்மன் இஸ்லாம் 2 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 8 வது ஓவரின் முதல் பந்தில் ஜாகீர் ஹசன் 3 ரன்களிலும், 2ம் பந்தில் மோமினுல் ஹாக் ரன் ஏதும் எடுக்காமலும் ஆகாஸ் தீப் பந்தில் ஆட்டமிழந்தனர்.

ஓரளவு சிறப்பாக ஆடிய சாண்டோ 20 ரன்களிலும், ரஹிம் 8 ரன்களிலும், லிட்டன் தாஸ் 22 ரன்களிலும், ஷாகில் அல் ஹசன் 32 ரன்களிலும், ஹசன் முகமது 9 ரன்களிலும், தஸ்கின் அஹமது 11 ரன்களிலும், நஹித் ராணா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மெஹிதி ஹசன் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 47.1 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், அகாஷ் தீப், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆடி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE