“இறுதிப் போட்டியே எங்களது இலக்கு” - SRH கேப்டன் கம்மின்ஸ் பேச்சு

By KU BUREAU

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்தது.

“எங்கள் அணி வீரர்கள் சீசன் முழுவதும் அற்புத செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அணியின் வைபை (Vibe) நீங்கள் பார்த்தாலே அது தெரியும். சீசனின் தொடக்கத்தில் இறுதிப் போட்டி எங்களது இலக்காக இருந்தது. அதை நாங்கள் எட்டியுள்ளோம். எங்கள் அணியின் பலம் பேட்டிங் தான். அணியினரின் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

புவி (புவனேஸ்வர் குமார்), நட்டு (நடராஜன்), உனத்கட் ஆகியோர் எனது பணியை எளிதாக மாற்றுகின்றனர். இடது கை ஆர்தோடெக்ஸ் பந்து வீச்சாளரான வெட்டோரி, அதே பாணி வீரர்கள் அதிகம் அணியில் வேண்டும் என விரும்புவார். அந்த வகையில் இம்பாக்ட் வீரராக ஷாபாஸ் அகமது வாய்ப்பு பெற்றார். அபிஷேக்கின் பந்து வீச்சு சர்ப்ரைஸ் தந்தது. மிடில் ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உதவினார்.

170 ரன்கள் இலக்கை விரட்டுவது சவாலானது. இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஃப்ரான்சைஸ் சார்பில் 60 முதல் 70 பேர் கடுமையாக உழைக்கின்றனர். இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான் எஞ்சியுள்ளது” என தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான ஆஸி. அணி கடந்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. அதை கருத்தில் கொண்டே இந்த சீசனுக்கு முன்னதாக அவரை ஏலத்தில் எடுத்திருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம். தற்போது இறுதிப் போட்டிக்கும் அந்த அணி முன்னேறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE