இந்தியாவில் நடந்து வரும் டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் தொடரை இந்தியா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் மேக்ஸ்வெல் அடித்த அதிரடி சதத்தால் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, தொடரை இழக்காமல் உயிர்ப்புடன் வைத்துள்ளது.
இன்றைய போட்டியில் உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்ற எந்த வீரரும் இல்லாமல் முற்றிலும் புதிய அணியாக ஆஸ்திரேலியா களமிறங்கவுள்ளது. தொடரின் மத்தியில் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, ஸ்மித், ஸ்டோய்னிஸ் உள்பட உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடிய வீரர்கள் தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், பென் மெக்டெர்மாட் கிறிஸ் கிரீன், பென் ட்வார்ஷுயிஸ் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு போட்டிகள் அந்த ரன்களை சேஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம். ஆஸ்திரேலியா வென்றால் சமநிலை அடைவதுடன், அடுத்த போட்டி பரபரப்பு மிக்கதாக அமையக்கூடும்.