உதட்டில் முத்தம்... கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மீது பாய்ந்தது நடவடிக்கை!

By காமதேனு

ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைக்கு உதட்டில் முத்தமளித்த சர்ச்சை விவகாரத்தில், நாட்டின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியால்ஸ் மீது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆக.20 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதற்கான பரிசளிப்பு விழாவின்போது வீராங்கனைகளுக்கு வரிசையாக வாழ்த்து தெரிவித்த ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியால்ஸ், ஜென்னி ஹெர்மோசோ என்ற வீராங்கனையை திடீரென ஆரத்தழுவி உதட்டில் முத்தமிட்டார்.

இதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மையம் கொண்டதும் பெரும் சர்ச்சை எழுந்தது. வீராங்கனையின் சம்மதத்துடனே முத்தமிட்டதாக லூயிஸ் தெரிவித்தார். ஆனால் இதனை ஜென்னி மறுத்தார்.

உடனே, லூயிஸ் பதவி விலகக்கோரி அவருக்கு எதிராக அணியின் வீராங்கனைகள், ரசிகர்கள், பொதுமக்களின் போராட்டங்கள் தொடங்கின. ஸ்பெயின் அரசு சார்பிலும் லூயிஸ்க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சர்ச்சை முத்தம்

ஆனால் லூயிஸ் ராஜினாமா செய்ய மறுத்து பிடிவாதம் சாதித்தார். இதற்கிடையே சர்ச்சை சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, லூயிஸ் ரூபியால்ஸ் மீது ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது. ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, 90 நாட்களுக்கு அவரை சஸ்பெண்ட் செய்தும் ஃபிஃபா உத்தரவிட்டுள்ளது.

இடைப்பட்ட காலத்தில் கால்பந்து வீராங்கனை ஜென்னியை லூயிஸ் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது, விசாரணை விவகாரம் தொடர்பாக அவருக்கு அழுத்தம் எதையும் தரக்கூடாது என்பது உள்ளிட்ட உத்தரவுகளையும் ஃபிஃபா பிறப்பித்துள்ளது. இதனையடுத்து லூயிஸ்க்கு எதிராக சர்வதேச அளவில் திரண்ட போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE