ஈட்டி எறிதலில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் வாயிலாக, பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தான் பங்கேற்கும் வாய்ப்பை இந்தியாவின் நீரஜ் சோப்ரா உறுதி செய்திருக்கிறார்.
ஹங்கேரி தேசத்தின் தலைநகர் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈட்டி எறிதலில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.77 மீ தொலைவுக்கு ஈட்டியை எறிந்து, அதன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கம் வெல்வாரா என்ற கேள்விக்கு இதன் மூலம் நம்பிக்கை தந்துள்ளார்.
இன்று(ஆக.25) நடைபெற்ற ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றின் முதல் முயற்சியிலேயே இந்த சாதனையை நீரஜ் ஈட்டி இருக்கிறார். இதன் மூலம் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் அவர் தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் 83 மீ ஈட்டி எறிந்தாலே உலக சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்ற நிலையில், நீரஜ் அதிரடியாய் 88.77 மீ தொலைவு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். ஆக.27, ஞாயிறு அன்று நீரஜ் உட்பட 12 பேர் இறுதி சுற்றில் மோத இருக்கிறார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில்(2021) தங்கம், ஆசிய விளையாட்டு போட்டியில்(2018) தங்கம், காமன்வெல்த் போட்டியில்(2018) தங்கம் என ஈட்டி எறிதலில் இந்தியாவின் தங்க மகனாக ஜொலிக்கும் நீரஜ் சோப்ரா, உலக சாம்பியன்ஷிப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என்ற திடமான எதிர்பார்ப்பை தனது திறமையால் உருவாக்கி உள்ளார்.
புடாபெஸ்ட் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானுவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.