நியூசியை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரக அணி; டி20 போட்டியில் வென்று வரலாறு படைத்தது!

By காமதேனு

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது ஐக்கிய அரசு அமீரக அணி.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. துபாயில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றிருந்தது

இந்நிலையில் 2-வது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி நியூசிலாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இறுதியில் 20 ஒவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக செப்மேன் 63 (46) ரன்கள் எடுத்தார். அமீரக அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆயன் கான் 3 விக்கெட்டுகளும், ஜவாதுல்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமீரக அணியில் கேப்டன் முகமது வாசிம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 (29) ரன்களும், அசிப் கான் 48 (29) ரன்களும், விருட்யா அரவிந்த் 25 (21) ரன்களும் எடுத்தனர். இறுதியில் அமீரக அணி 15.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 144 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமீரக அணி வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் நியூசிலாந்து - அமீரக அணிகள் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கிடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE