மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி இன்று சந்திக்கிறது.
மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.
அந்த வகையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் - உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணிகள் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளின்படி, வாரியர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4-ல் தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே, 6 புள்ளிகளுடன் இந்த புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
இதேபோல் 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி ஒன்றில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதனால் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய நேரப்படி இரண்டு அணிகளுக்கான போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் குஜராத் அணி இந்த தொடரில் வெற்றிபெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.