செல்ஃபி எடுக்க மோதல்... ரசிகர் மண்டை உடைப்பு... ஓட்டம் பிடித்த பெக்காமின் மனைவி, மகள்

By காமதேனு

விருந்து ஒன்றில் அனுமதியின்றி மெஸ்சி, அவரது மனைவியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் மண்டையை ஓட்டல் காவலர் உடைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோதலால் பெக்காமின் மனைவியும், மகளும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிளப் அணிகளுக்கான லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டித்தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக நட்சத்திர வீரர் மெஸ்சி விளையாடி வருகிறார். இந்த தொடரின் அரையிறுதி போட்டி ஒன்றில் இன்டர் மியாமி அணி பிலடெல்பியா அணியை எதிர்கொண்டது. இதில் மியாமி, பிலடெல்பியாவை 4-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் மார்டினெஸ், மெஸ்சி, ஜோர்டி ஆல்பா மற்றும் டேவிட் ரூயிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் மெஸ்சியின் மாயாஜால கோல் அடிக்கப்பட்டது. இதன் மூலம், மியாமி அணிக்காக விளையாடிய 6 போட்டிகளில் மெஸ்சி 9 கோல்களை அடித்துள்ளார். இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக மியாமியில் உள்ள கெக்கோ உணவகத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது ரசிகர்கள் மெஸ்சியுடன் செல்ஃபி எடுக்க குவிந்ததால் அங்கு வன்முறை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

ரசிகர் மண்டை உடைப்பு

கிளப் உரிமையாளரும் முன்னாள் இங்கிலாந்து நட்சத்திர வீரருமான டேவிட் பெக்காம், அவரது மனைவி, மகள் மற்றும் மெஸ்சியின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸோ ஆகியோரும் விருந்தில் கலந்து கொண்டனர். விருந்துக்கு மெஸ்சி வந்தவுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதம், கைகலப்பு உருவானது. அனுமதியின்றி மெஸ்சி மற்றும் அவரது மனைவியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் மண்டையை ஓட்டல் காவலர் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. மோதல் ஏற்பட்ட உடனேயே, பெக்காமின் மனைவியும், மகளும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE