பீலேவிற்கு எதிராக கோலடித்த இந்திய கால்பந்து ஜாம்பவான் மரணம்!

By காமதேனு

பிரபல கால்பந்து ஜாம்பவான், பீலேவிற்கு எதிராக கோலடித்து புகழ் பெற்ற இந்தியாவின் நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரர் முகமது ஹபீப் (74) உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 74.

கோலாலம்பூரில் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மெர்டெக்கா கோப்பை கால்பந்து போட்டி மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர் முகமது ஹபீப். கடந்த 1949 ஜூலை 17-ம் தேதி பிறந்த ஹபீப், இந்தியாவுக்காக 35 ஆட்டங்களில் விளையாடி 11 கோல்கள் அடித்திருக்கிறார்.

மேலும் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்துள்ளார். அத்துடன் 1970-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளார்.

1977-ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோகன் பகான் - காஸ்மோஸ் கிளப் அணிகளிடையே நட்பு ரீதியிலான ஆட்டம் நடைபெற்றது. பிரேசிலுக்காக மூன்று முறை உலகப்கோப்பையை வாங்கித் தந்த கால்பந்து ஜாம்பவான் பீலே அங்கம் வகித்த காஸ்மோஸ் அணிக்கு எதிராக கோலடித்த பெருமை ஹபீபுக்கு உண்டு. அந்த ஆட்டத்தை மோகன் பகான் 2-2 என டிரா செய்து அசத்தியிருந்தது.

இந்த ஆட்டத்துக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் ஹபீபின் ஆட்டம் குறித்து பீலே புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் இந்திய கால்பந்து சங்க அகாடமியில் தலைமை பயிற்சியாளராகவும் ஹபீப் பணியாற்றினார். அவரது மறைவுக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE