சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை இந்திய அணி வீழ்த்தியது. 4-வது முறையாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் 9வது நிமிடத்தில் இந்தியா முதல் கோலை அடித்தது. அதனைத் தொடர்ந்து அதிரடி காட்டிய மலோசிய முதல் பாதியில் 3 - 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்திய அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் சுதாரித்த இந்திய அணி 43 மற்றும் 44 வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியபோது 54வது நிமிடத்தில் இந்திய அணி மீண்டும் கோல் அடித்து 4 -3 என்றக் கணக்கில் வெற்றிக்கனியை ருசித்தது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இந்தியாவில் முதல் முறையாக நடத்தபட்டது. 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா ஆகிய அணிகள் களமிறங்கின.
போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதைதொடர்ந்து, 5வது இடத்திற்கான போட்டியில் சீனாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்று மலேசிய அணிகள் மோதின. இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளித்தார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வெற்றியை பிரதமர் மோடி பெருமையுடன் பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி 2011, 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, தற்போது 4வது முறையாக சாம்பியனாகியுள்ளது.