கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை

By KU BUREAU

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி.

லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ரன்களும், இலங்கை 263 ரன்களும் எடுத்தன. 62 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜேமி சுமித் 67, டான் லாரன்ஸ் 35 ரன்கள் சேர்த்தனர்.

219 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 40.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திமுத் கருணரத்னே 8, குஷால் மெண்டிஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனது 2-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பதும் நிஷங்கா 124 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 127 ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இங்கிலாந்து மண்ணில் இதுவரை விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி பெறும் 4-வது வெற்றி இதுவாகும். 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் அந்த அணி டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE