நைஜீரியாவுக்கு எதிரான போட்டியின் போது இங்கிலாந்து அணி வீராங்கனையான லாரன் ஜேம்ஸ், எதிரணி வீராங்கனையின் மீது ஏறி நடந்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து வீராங்கனைக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மகளிர் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் இங்கிலாந்து - நைஜீரிய அணிகளுக்கு இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான போட்டி விறுவிறுப்புடன் நடந்தது. ஒரு கட்டத்தில் நைஜீரியா வீராங்கனை டிஃபெண்டர் மிச்செல் அலோசி மீது இங்கிலாந்து வீராங்கனை லாரன் ஜேம்ஸ் ஏறி சென்றார். இதையடுத்து, லாரன் ஜேம்ஸ் சிவப்பு அட்டையை பெற்றார். முதலில் மஞ்சள் அட்டையை காட்டிய நடுவர், ரிப்ளே பார்த்துவிட்டு கடும் கோபத்துடன் களத்திற்கு திரும்பி வந்து, "எல்லோ கார்டு நீக்கப்படுகிறது, ரெட் கார்டு கொடுக்கிறோம்" என்று மைக்கில் கூறினார்.
பெனால்டி வாய்ப்பில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், கால் இறுதி போட்டியில் லாரன் ஜேம்ஸால் விளையாட முடியாது. அந்த அணி இன்று சிட்னியில் கொலம்பியாவுக்கு எதிராக ஆட உள்ளது. ஒரு வேளை இந்த போட்டியில் வென்று அரையிறுதி சென்றால் அதிலும் லாரன் ஜேம்ஸால் ஆட முடியாது. லாரன் ஜேம்ஸ் இங்கிலாந்தின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஜேம்ஸ், இந்த தொடரில் மூன்று கோல்களுடன், இங்கிலாந்தின் மிகவும் தேவையான வீரராக உள்ளார். உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி 20ம் தேதி நடக்கிறது.