செய்தித் துளிகள்: சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் முதல் கால்பந்து லீக் போட்டி வரை 

By KU BUREAU

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் இன்று தொடக்கம்: சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் இன்று (செப்டம்பர் 9) தொடங்கவுள்ளது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. ரவுண்ட் ராபின் லீக் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். எஸ்என்ஜே குரூப், ஆச்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ், ரோமா குரூப், 2குரோ எச்ஆர் நிறுவனங்களின் ஆதரவுடன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பரிசுத்தொகை ரூ.5 லட்சமாகும். சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11-ம் தேதி முதல் தெற்காசிய ஜூனியர் தடகளம்: சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியை வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தமிழ்நாடு தடகள சங்கம் (டிஎன்ஏஏ) நடத்தவுள்ளது. இந்தப் போட்டியில் 7 தெற்காசிய நாடுகளில் இருந்து 210 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். மொத்தம் 28 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் பங்கேற்கவுள்ளனர். போட்டியை வரும் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு தடகள சங்க கவுரவச் செயலர் சி. லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் கால்பந்து லீக் போட்டி: 14 வயதுக்குட்பட்டோருக்கான சென்னை கால்பந்து லீக் போட்டி (சிகேஎல்) இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை நேரு பூங்காவிலுள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் 18 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்கின்றன. 4-வது ஆண்டாக இந்த சிகேஎல் கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசன் முழுவதிலும் தொடர்சுழல்முறை வடிவத்தில் மொத்தம் 46 போட்டிகள் நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE