2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்து பலரும் தற்போதே ஆருடம் சொல்லத் தொடங்கியுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்த ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ள அவர்," ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியை நான் அருகிலிருந்து பார்த்ததே இல்லை. இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது நான் அணியில் விளையாடவில்லை. ஆனால், அது மிகவும் அழகான தருணம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்," இந்தியாவில் நாங்கள் பயணிக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்பது எங்களுக்கு நிச்சயமாக தெரியும். அதனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது, அதே ஆவல் எனக்கும் உள்ளது" என்றார்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், போட்டி தொடர் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் விளையாட ஆவலாக உள்ளதாக ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.