எங்கள் மகன் முதல் கோல் அடித்த சந்தோஷத்தை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவன் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எங்களது ஆசை என ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணிக்காக விளையாடிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்கின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஹாக்கி இந்தியா அமைப்பும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.
இந்த போட்டியை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக இந்தியா அணிக்காக விளையாடும் தமிழ்நாட்டு வீரர் கார்த்திக்கை கவுரவப்படுத்தும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பூங்கொத்து கொடுத்து நினைவுப் பரிசு வழங்கினார்.
இதையடுத்து நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இந்திய அணி 6 கோல்களும், சீன அணி 2 கோல்களும் அடித்தன. 2-வது பாதி ஆட்டத்தின் போது இந்திய வீரர் மந்தீப் சிங் சர்வதேச போட்டிகளில் தனது 100ஆவது கோலை அடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7-2 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் வருண் குமார் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 2 கோல்களையும், ஆகாஷ்தீப், சுக்ஜீத், மந்தீப் சிங் ஆகியோர் ஒரு கோலும் அடித்தனர்.
இந்நிலையில், இந்திய அணிக்காக விளையாடிய தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் கார்த்திக்கின் குடும்பத்தினர், மகன் விளையாடுவதை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது கார்த்திக்கின் விளையாட்டை கான வந்த அவரது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினரை சந்தித்த கார்த்திக், அவர்களை ஆரத்தழுவி பெற்றோரின் வாழ்த்துகளையும், ஆசியையும் பெற்று சென்றார்.
இதனையடுத்து, கார்த்திக்கின் குடும்பத்தினர் அனைவரையும் நேரில் சந்தித்த ஹாக்கி இந்தியா கூட்டமைப்பின் செயலாளர் போல்நாத் சிங், அவரின் பெற்றோருக்கு இந்திய ஹாக்கி சங்கம் சார்பில் கவுரவப்படுத்தி, போட்டிக்கு இடையே நினைவு பரிசு வழங்கினார். அதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கார்த்திக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்துகள் கூறினார்.
போட்டி நிறைவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக்கின் பெற்றோர், முதல் முறையாக, சர்வதேச போட்டியில் கார்த்திக் விளையாடுவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் மகன் முதல் கோல் அடித்த சந்தோஷத்தை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவன் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எங்களது ஆசை என்று தெரிவித்தனர்.