அக்.14ல் இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி! ரசிகர்கள் உற்சாகம்!

By காமதேனு

அக்டோபர் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நவராத்திரி விழா தொடக்கத்தை முன்னிட்டு ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14ம் தேதியே நடத்தப்பட உள்ளது.

2023ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 4 முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நவராத்திரி கொண்டாட்டங்கள் அக்டோர்பர் 15ம் தேதி தொடங்குவதால், அன்று அகமதாபாத்தில் விமான டிக்கெட் விலை மற்றும் விடுதிகளின் கட்டணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க தேவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஒருநாள் முன்னதாக நடத்த பிசிசிஐ, ஐசிசியுடன் இணைந்து திட்டமிட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. இதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் போட்டியை ஒருநாள் முன்னதாக நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 14ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அக்டோபர் 12ம் தேதி நடைபெற இருந்த இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE