10 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த மங்கோலியா அணி: டி20ல் மோசமான உலக சாதனை!

By KU BUREAU

பாங்கி: டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்று ஏ ஆட்டத்தில் மங்கோலியா அணி 10 ரன்களின் சுருண்டு மோசமான உலக சாதனை படைத்துள்ளது.

2026ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச்சுற்று ஏ போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மலேசியாவின் பாங்கியில் நடைபெற்ற போட்டியில் மங்கோலியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த மங்கோலிய அணி 10 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மங்கோலிய அணி வீரர்களான மோகன் விவேகானந்தன் , தவாசுரேன் ஜாமியன்சுரேன் , துமுர்சுக் துர்முங்க் , டெமுலென் அமர்மென்ட் , டோர் போல்ட் ஆகிய வீரர்கள் டக் அவட் ஆனார்கள். சிங்கப்பூர் தரப்பில் ஹர்ஷா பரத்வாஜ் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக டி20 போட்டிகள் வரலாற்றிலேயே குறைந்த ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை படைத்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிங்கப்பூர் அணி வெறும் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆசிய தகுதிச்சுற்றில் ஹாங்காங் முதல் இடத்திலும், குவைத் இரண்டாம் இடத்திலும், மலேசியா 3ம் இடத்திலும், சிங்கப்பூர் நான்காம் இடத்திலும் உள்ளது. அனைத்துப்போட்டிகளிலும் தோல்வியடைந்த மங்கோலியா அணி 7ம் இடத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE