புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி குஜராத் ஜாம்நகர் தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.
பாஜக எம்எல்ஏவும், ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா தனது சமூக ஊடக பக்கத்தில், அவர் புதிய உறுப்பினராக புதுப்பித்த படங்களை வெளியிட்டார். மேலும், ரிவாபா தனது பதிவில், பாஜக உறுப்பினர் அட்டையில் தானும், தனது கணவரும் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்தார். அவர் செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை உறுப்பினராக புதுப்பித்து சேர்த்தார். இதனையடுத்து நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது.
ஜடேஜாவின் மனைவி ரிவாபா 2019ல் பாஜகவில் சேர்ந்தார். அவர் 2022ல் ஜாம்நகர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளர் கர்ஷன்பாய் கர்முரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
» பாஜகவில் சீட் மறுப்பு: ஹரியாணா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரஞ்சித் சிங் சௌதாலா!
» கோவை விமான நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் பயணிகள் எண்ணிக்கை 2.79 லட்சமாக பதிவு
35 வயதான கிரிக்கெட் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் வரலாற்று டி20 உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் அவர் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார்.