ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரை 2-0 எனமுழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 274 ரன்களும், வங்கதேசம் 262ரன்களும் எடுத்தன. 12 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 185 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது.
ஸாகிர் ஹசன் 31, ஷத்மான் இஸ்லாம் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 56 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸாகிர் ஹசன் 40, ஷத்மான் இஸ்லாம் 24, நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 38, மொமினுல் ஹக் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். முஸ்பிகுர் ரஹிம் 22, ஷகிப் அல்ஹசன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்று சாதனை படைத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேச அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதன்முறையாகும். முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
» ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தில் டார்க் காமெடி
» சென்னை | வயதான பெண் பயணியிடம் ரயிலில் நகை திருட்டு: இரண்டு பெண்கள் கைது
10 போட்டியில் வெற்றி இல்லை: பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 3-வதுமுறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரானதொடரை இழந்த பாகிஸ்தான் அணி தற்போது வங்கதேசத்திடமும் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி சொந்தமண்ணில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இதில் 6 ஆட்டங்களில் தோல்வியையும், 4 ஆட்டங்களை டிராவும் செய்துள்ளது.