இந்தியாவில் நடைபெறும் 2023ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்க உள்ளது. உலக அளவில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி அக்டோபர் 15ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேதியில் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி விழாவின் தொடக்கம் என்பதால், விமான டிக்கட் விலை மற்றும் விடுதி கட்டணங்கள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் பாதிக்கப்படலாம் என்பதால் போட்டியை ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14ம் தேதி நடத்த ஐசிசி, பிசிசிஐ இணைந்து திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்திலேயே இந்த போட்டி நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய - பாகிஸ்தான் போட்டியை மாற்றியமைப்பது தொடர்பாக ஐசிசி - பிசிசிஐ இணைந்து ஆலோசனை நடத்தி பின்பு முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக கோப்பை தொடரை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள மாநில கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ நாளை ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மாநிலங்களை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் கலந்துகொள்கின்றன. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தேதி மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது