அடுத்த ஆண்டிலும் கார் பந்தயம் நடத்தப்படுமா? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

By KU BUREAU

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் அமைப்பு ஆகியவை இணைந்து சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டியை தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சாலை பகுதியில் நடத்தியது. தெற்கு ஆசியாவின் முதல் இரவு நேர சாலை கார்பந்தயமான இந்த போட்டியின் பிரதான சுற்று நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் ஃபார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் 1-ல் ஆஸ்திரேலிய வீரர் ஹக் பார்ட்டர் (காட்ஸ்பீடு கொச்சி) பந்தய தூரத்தை 19:42.952 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். இந்தியாவின் ருஹான் ஆல்வா (பெங்கால் டைகர்ஸ்) பந்தய தூரத்தை 19:50.251 வினாடிகளில் அடைந்து 2-வது இடமும், மற்றொரு இந்திய வீரரான அபய் மோகன் (பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ்) 20:09.021 வினாடிகளில் இலக்கை அடைந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த பிரிவில் பந்தயம் 2-ல் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அலிபாய் (ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ்) 30:03:445 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். முதல் பந்தயத்தில் அலிபாய் கடைசி நொடியில் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்கமுடியாமல் போனது. எனினும் 2வது பந்தயத்தில் அவர், முத்திரை பதித்தார். இந்த பந்தயத்தை அவர், 4-வது நிலையில் (pole position)இருந்தே தொடங்கியிருந்தார். எனினும் தனது மின்னல் வேக திறனால் அவர், பந்தயத்தை முதலிடத்துடன் நிறைவு செய்தார்.

இந்தியாவின் திவி நந்தன் (அகமதாபாத் அப்பேக்ஸ் ரேசர்ஸ்) 30:03:704 விநாடிகளில் இலக்கை எட்டி 2-வது இடத்தையும், மற்றொரு இந்திய வீரரான ஜடேன்பாரியட் (பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ்) 30:04:413 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டியுடன் இந்தியன் ரேசிங் லீக், ஜேகே ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இதன் பின்னர் அவர், கூறும்போது, “சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள இந்த கார் பந்தயத்துக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள இந்தக் கார் பந்தயப் போட்டியைமுதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளப் பதிவில், “ஃபார்முலா 4 சென்னை கார்பந்தயத்தை வெற்றியடையச் செய்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE