தெறிக்கவிட்ட அஸ்வின்; 145 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து... வெற்றியின் விளிம்பில் இந்தியா!

By காமதேனு

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி வெறும் 145 ரன்களில் சுருண்டு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சரித்தார். இதனால் இப்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 353 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் அதிகபட்சமாக 122 ரன்களை எடுத்தார். இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய போது முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஜெய்ஷ்வால் மற்றும் துருவ் ஜூரல் அபாரமாக விளையாடி இந்தியாவை 307 ரன்கள் வரை கொண்டு சேர்த்தனர்.

இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட ஆரம்பித்தனர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அஸ்வின் அபாரமாக பந்து வீசி பென் டக்கட், ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாற்றத்தை கண்டது. எனினும் ஜாக் கிராலி மற்றும் பாரிஸ்டோ ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற நிலையில் இருந்த போது குல்தீப் யாதவ் கையில் பந்து சென்றது. அவருடைய மாயாஜால பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர்.

ஜாக்கிராலி 62 ரன்களும், பாரிஸ்டோ 30 ரன்களும், பென் ஃபோக்ஸ் 17 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 110 ரன்கள் மூன்று விக்கெட் என இருந்த இங்கிலாந்து அணி அடுத்த 35 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி 2ம் இன்னிங்சில் விளையாடி வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE