பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 8வது பதக்கம்: வெள்ளி வென்றார் யோகேஷ் கதுனியா!

By KU BUREAU

பாரிஸ்: பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான வட்டு எறிதல் F56 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது இந்த பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 8வது பதக்கம் ஆகும்.

பாரிஸ் பாராலிம்பிக்கின் 5-வது நாளான இன்று இந்திய வட்டு எறிதல் வீரர் யோகேஷ் கதுனியா, F56 பிரிவில் 42.22 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கிலும் 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இன்று நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பேட்மிண்டன் நட்சத்திரங்களான சுஹாஸ் யதிராஜ், நித்தேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் ஆகியோர் தங்களின் தங்கப் பதக்கப் போட்டியில் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடும் வீரர்களான நிஹால் சிங் மற்றும் அமீர் அகமது பட் ஆகியோர் பி3 - கலப்பு 25மீ பிஸ்டல் எஸ்ஹெச்1 தகுதித் சுற்றில் விளையாடவுள்ளனர்.

மேலும், நட்சத்திர வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் கலப்பு அணி காலிறுதி போட்டியில் பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் ஆன்டில் விளையாடவுள்ளார். எனவே இன்றைய போட்டிகளில் இந்தியா பல பதக்கங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE