இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினர். டக்கெட் 11 ரன்கள் எடுத்த போது ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார். இதே ஓவரில் ஒல்லி போப் ரன் ஏதும் எடுக்காமலும், அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்களிலும் ஆகாஷ் தீப் ஓவரில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஓரளவு நன்றாக ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோ 38 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் வீழ்ந்து வெளியேறினார். 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில் ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய போக்ஸ் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்ட்லி 13 ரன்னில் வெளியேறினார்.
ஆனாலும் பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் ராபின்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 226 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தும், ராபின்சன் 60 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அரசியல் மாநாடு... விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!
நெகிழ்ச்சி... தாயின் கல்லறை முன் மனைவிக்கு தாலி கட்டிய மகன்!
திருவிழாவில் பயங்கரம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை!
மகளுக்குக் கொடுத்த 'லால்சலாம்' வாய்ப்பு...தோல்வியில் முடிந்தும் சோகத்தை வெளிக்காட்டாத ரஜினி!