இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ள ஆகாஷ் தீப், போட்டி தொடங்குவதற்கு முன்பாக தனது தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது, 3வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றிப் பெற்றுள்ளன. இதன் மூலம் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக ஆகாஷ்தீப் எனும் வீரர் அறிமுகமானார். இதன் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் இவர் முதன்முறையாக களமிறங்கியுள்ளார்.
போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஆகாஷ்தீப்புக்கு டெஸ்ட் அணி தொப்பியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மைதானத்தில் பார்வையாளர்களாக இருந்த அவரது பெற்றோர், தனது மகன் இந்திய அணிக்காக விளையாடுவது நினைத்து பூரிப்படைந்தனர். தொப்பியை வாங்கிய கையோடு, தனது பெற்றோரை நோக்கி வந்தார். தாயிடம் தொப்பியை கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் ஆகாஷ்தீப். அவரது தாய், மகனின் தலையை தடவிக் கொடுத்து வாழ்த்தினார்.
அதன் பின் போட்டியில் 4வது ஓவரிலேயே ஆகாஷ்தீப் பந்துவீச்சில் ஸ்டம்ப் பறந்தது. ஆனால், அது நோ பால் என்பதால் ஏமாற்றம் அடைந்தார் ஆகாஷ்தீப். எனினும், அதன்பின்னர் இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்களை அவரே வீழ்த்தினார். அந்த வகையில் தன் தாயின் ஆசிர்வாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் கேரியரை சிறப்பாக துவக்கி இருக்கிறார் ஆகாஷ்தீப். அவர் தனது தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 3வது டெஸ்ட் தொடரில் சர்பராஸ்கான் அறிமுகமானார். அவரும் தனது டெஸ்ட் தொப்பியை, தந்தையிடம் அளித்ததும், அதை வாங்கி கண்ணீர்மல்க தொப்பிக்கு முத்தமிட்டு, மகனை கட்டி அணைத்ததும் உணர்ச்சிமயாக இருந்தது. அதேபோல், தற்போது ஆகாஷ்தீப், அவரது தாய்க்கு மரியாதை செய்தது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் நம்பிக்கையான வீரர்கள் அறிமுகமும், மூத்த வீரர்கள் சாதனை புரிவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!
ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!
தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?