அறுவை சிகிச்சை காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருந்த கே.எல்.ராகுல் இந்த வாரம் முதல் மீண்டும் பயிற்சியை துவங்க உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். கடந்த ஏப்ரல் மாதம் பெங்களுரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது, அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த மே மாதம் 9ம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மருத்துவர்களின் அறிவுரையை தொடர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்து வந்த அவர், கடந்த வாரம் முழுமையாக குணமடைந்தார். இதனையடுத்து, கடந்த சில நாட்களாக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். விரைவில் அவர் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட உள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஆகஸ்டு இறுதியில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் கே.எல்.ராகுல் முழு உடல் தகுதியுடன் மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்டும் விபத்து காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், கே.எல்.ராகுலில் வருகை இந்திய அணிக்கு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.