இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ள நிலையில், ஜெய்ஸ்வால் சதம் கடந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. தாயின் உடல் நலக்குறைவு காரணமாக சென்னைக்கு சென்ற நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ராஜ்கோட் திரும்பி அணியில் இணைந்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே நான்காவது நாள் போட்டி இன்று துவங்கிய நிலையில், சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். படிதார் ரன் எதுவும் எடுக்காமலும் குல்தீப் யாதவ் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து சர்ஃப்ராஸ் கானுடன் இணைந்து ஜெய்ஸ்வால் போட்டியை தொடர்ந்து வருகிறார். தற்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணி 394 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெரும் வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.