புதுடெல்லி: மகளிருக்கான 9-வது ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் கடைசி கட்டத்தில் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தொடர்கிறார். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது. மேலும் சமீபகாலமாக ஹர்மன்பிரீத் கவுரும் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இல்லை. இதனால் அவர், கேப்டன் பதவியில் நீடிப்பாரா? என்பதில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் அவரது தலைமையிலேயே இந்தியஅணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த உமா சேத்ரி நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. காயம் அடைந்த சுழற்பந்து வீச்சு வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல், பேட்டரான யாஷ்திகா பாட்டியா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள 8 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஒரே ஒரு முறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது.
» ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு
» சென்னை | நீரில் மூழ்கடித்து இளைஞர் கொலை: 4 மாதங்களுக்கு பிறகு ரவுடி கைது
இம்முறை இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிளும் உள்ளன. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் அக்டோபர் 4-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது. தொடர்ந்து 6-ம் தேதி பாகிஸ்தானுடனும், 9-ம் தேதி இலங்கையுடனும், 13-ம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடனும் இந்திய அணி மோதுகிறது.
அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்.