உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமான வெற்றியை பெற்றுள்ளது.
இந்தியா தென்னாபிரிக்கா இடையேயான உலகக் கோப்பை தொடரின் 37 ஆவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. விராட் கோலி, ஸ்ரேயர்ஸ் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி 326 ரன்கள் குவித்து இருந்தது. பிறந்தநாளில் களமிறங்கிய விராட் கோலி, தனது 49 வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்திருந்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்திருந்தார்.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஆரம்பம் முதலே வீரர்கள் ரன்களை எடுக்க திணறினர். அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் 27.1 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முகமது சமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகிக்கிறது. மேலும் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத அணி என்ற பெருமையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.