ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை வங்கதேச கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வந்தது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் ஆட்டமிழந்தார். சயீம் அயூப் 56 ரன்களில் அவுட்டானார். வங்கதேச அணி சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் குவித்து அவுட்டானார். ஷட்மன் இஸ்லாம் 93, மெஹிதி ஹசன் 77, லிட்டன்தாஸ் 56, மொமினுல் ஹக் 50 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா3 விக்கெட்டும், குர்ராம் ஷசாத், முகமது அலி, ஷாகீன் ஷா அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. 4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.
» முகநூலில் சர்ச்சை கருத்து பதிவு: பாடியநல்லூர் ஊராட்சி தலைவரின் கணவர் கைது
» ‘காதலும் பரிவும் நிறைந்தவன் கிருஷ்ணன்!’ - ஓஷோ | கோகுலாஷ்டமி ஸ்பெஷல் பகிர்வு
இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்துல்லா ஷபிக் 12, கேப்டன் ஷான் மசூத்9 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால் வங்கதேச வீரர்களின் அற்புதமான பந்துவீச்சால் பாகிஸ்தான் விக்கெட்கள் மளமளவென சரிந்தன. வங்கதேச வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி நிலைகுலைந்தது. ஷபிக் 37, கேப்டன் ஷான் மசூத் 12, கேப்டன் பாபர் அஸம் 22, முகமது ரிஸ்வான் 51 ரன்கள் எடுத்தனர். மற்றவீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில், பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள்எடுத்தது. இதையடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி கண்டது. ஜாகிர் ஹன் 15, ஷட்மன் இஸ்லாம் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 191 ரன்கள் குவித்த முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் முதல்முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 12 போட்டிகளில் தோல்வி கண்ட வங்கதேசம், ஒரு போட்டியை டிரா செய்திருந்தது.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது வங்கதேசம். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.