நிகோலஸ் பூரன் அதிரடி: முதல் டி20-ல் மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி

By KU BUREAU

டிரினிடாட்: நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 65 ரன்கள் விளாசியதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

டிரினிடாட்டில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்களும், பாட்ரிக் குரூகர் 44 ரன்களும் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 42 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. அங்கிருந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது அதிரடியால் வலுவான இலக்கை கொடுக்க உதவினார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்டு 3, ஷமர் ஜோசப் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 175 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது 17.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான அலிக் அத்தனாஸ் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களும், ஷாய் ஹோப் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவர்களில் 84 ரன்களை வேட்டையாடியது.

இதன் பின்னர் களமிறங்கிய நிகோலஸ் 26 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்களை குவிக்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி இலக்கை எளிதாக அடைந்தது. முன்னதாக கேப்டன் ரோவ்மன் பவல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகனாக நிகோலஸ் பூரன் தேர்வானார். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE