உலக அளவில் இந்திய ஹாக்கி அணி முதலிடம் பெறும்: முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ் நம்பிக்கை

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: இந்திய ஹாக்கி அணியை உலகளவில் முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து இன்னும் 3 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள் இந்திய ஹாக்கி அணியில் சேர வாய்ப்புள்ளது என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது ரியாஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டு விடுதி அமைந்துள்ளது. இதில் 35 வீரர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோரும் இங்கு பயிற்சி பெறுகின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம் அமைந்துள்ளது. இது சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட செயற்கை புல் ஹாக்கி மைதானம் ஆகும். இங்குள்ள விளையாட்டு விடுதி மாணவர்கள் தொடர்ந்து சப்-ஜூனியர், ஜூனியர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஒலிம்பிக் வீரர் மற்றும் தற்போது இந்திய அணி வீரர்கள் தேர்வாளருமான (நான்கு பேர் கொண்ட குழுவில் இவரும் ஒருவர்) தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் ராமநாதபுரம் வந்துள்ளார். இவர் 1988-ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரருக்கான அர்ஜூனா விருது பெற்றவர்.

தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிபுணத்துவ ஹாக்கி பயிற்சியாளராக இருந்து வருகிறார். தமிழகம் முழுவதும் சென்று சிறந்த ஹாக்கி வீரர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முதல் ராமநாதபுரம் மாவட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்க உள்ளார்.

இதுகுறித்து இந்திய ஹாக்கி அணி தேர்வாளர் முகம்மது ரியாஸ் கூறும்போது, சர்வதேச அளவில் இந்திய அணி 5-ம் இடத்தில் உள்ளது. இதை முதலிடத்தில் கொண்டு வருவதற்கு திறமையான வீரர்களை உருவாக்கி வருகிறோம். அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ள ஆசியா கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

இதற்கான தேர்வு பெங்களூருவில் நடைபெற உள்ளது. தற்போதைய பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு தற்போதைய விளையாட்டு திறன்கள் குறித்து பயிற்சி அளித்து வருகிறோம்.

இதன் மூலம் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து சிறந்த வீரர்கள் தேசிய அளவிலும், இந்திய ஹாக்கி அணியிலும் சேர வாய்ப்புள்ளது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டுக்கு தகுந்த உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீரர்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து தருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் எம்.தினேஷ்குமார், மாவட்ட ஹாக்கி சங்க நிர்வாகி கிழவன் சேதுபதி மற்றும் பயிற்சியாளர்கள் உடன் இருந்தனர். 1,2: ராமநாதபுரம் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது ரியாஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE