ஐசிசி தலைவராகிறார் ஜெய் ஷா

By KU BUREAU

புதுடெல்லி: ஐசிசி-யின் தலைவராக தற்போது நியூஸிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். 2-வது முறையாக தலைவராக உள்ள அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் 3-வது முறையாக தலைவர் பதவியில் தொடர தனக்கு விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐசிசி-யின் அடுத்த தலைவராக பிசிசிஐ-யின் செயலாளராக உள்ள ஜெய் ஷா தேர்வாகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைவர் பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தால் தேர்தல் நடத்தப்படும். புதிய தலைவர்டிசம்பர் 1 முதல் பொறுப்பேற்றுக்கொள்வார். ஐசிசி விதிகளின்படி, தலைவர் பதவிக்கான தேர்தல் 16 வாக்குகளைஉள்ளடக்கியதாகும். இதில் 9 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம்.

வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ள16 உறுப்பினர்களில் பெரும்பாலானோருடன் ஜெய் ஷாவுக்கு சிறந்த தொடர்பு உள்ளது. இதனால் அவர், ஐசிசி-யின் தலைவராக தேர்வாகக்கூடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வேளை ஜெய் ஷா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இளம் வயதிலேயே ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். அவருக்கு தற்போது வயது 35. ஏற்கெனவே இந்தியாவில் இருந்து ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், சஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE