இந்தியா அபாரம்... முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது!

By காமதேனு

இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

லக்னோவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 29வது போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் ஷர்மா 87 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பும்ரா

230 ரன் என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 34.5 ஒவரில் 129 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி படுதோல்வியை சந்தித்தது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் அதிகபட்சமாக 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றி மூலம் இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து லீக் சுற்றுடன் உலகக் கோப்பை தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE