60 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளையாட செல்லும் இந்திய அணிக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்சினை நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே நீடித்து வருகிறது. அதிலும் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் என்பது தொடர்கதையாக உள்ளதால், இந்தியா பாகிஸ்தானுடனான பல்வேறு உறவுகளை துண்டித்து வைத்துள்ளது. அதில் விளையாட்டு போட்டிகளும் அடங்கும். கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் என எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதில்லை.
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றது. அதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அங்கு சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாடவுள்ளது. இது டேவிஸ் கோப்பை டென்னிஸில் ஒரு மதிப்புமிக்க போட்டியாக கருதப்படுகிறது. இந்த போட்டி தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கள் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் விளையாட இந்தியா பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் செல்ல மறுத்தது. ஆனால், சர்வதேச டென்னிஸ் கழகம் இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
இதையடுத்து, இந்த தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில் இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு அளிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, டென்னிஸ் மைதானத்தை சுற்றிலும் தினமும் வெடிகுண்டு சோதனை செய்யப்படும். வீரர்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பில் சிறு குறையும் ஏற்படக்கூடாது என பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய டென்னிஸ் அணி கடந்த 1964ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் விளையாடவில்லை. அதன் பின் 2019-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி மறுத்ததை அடுத்து, போட்டிகள் கஜகஸ்தானில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் ராம்குமார் ராமநாதன், நிகி பூஞ்சா, ஸ்ரீராம் பாலாஜி, யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி, கேப்டன் - ரோஹித் ராஜ்பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதோபோல், பாகிஸ்தானி அணியில் முஸம்மில் முர்தாசா, ஐசம் குரேஷி, அகில் கான், முகமது சோயப், பர்கத் உல்லா, கேப்டன் - முஹம்மது அபித் ஆகியோர் விளையாடுகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... இனி கணவருக்கு இல்லை பென்ஷன்... குழந்தைக்குத் தான்!
பழிக்குப் பழியாக பாஜக பிரமுகர் கொலை... 15 பேருக்கு மரண தண்டனை: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தங்க ரதத்தில் ஒரு வெள்ளி நிலவு... குடும்பத்துடன் பவதாரிணி எடுத்த கடைசி புகைப்படம்!