282 ரன் டார்கெட்... பாகிஸ்தானை மிரளவைக்குமா ஆப்கானிஸ்தான்?

By காமதேனு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்றுவரும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹாக்கும், அப்துல்லா சபீக்கும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது.

இமாம் உல் ஹாக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சபீக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த சபீக் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். நட்சத்திர ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சவுத் சகீல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்சாகி வெளியேறினார்.

இறுதியில் சதாப் கான் (40) மற்றும் இப்திகார் அகமது (40) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE