அதிக அளவு மது உட்கொண்டதால் மயங்கி விழுந்து மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல். டி20, ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் சிம்ம சொப்பமனாக இருப்பவர். கடந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவரது ஆட்டம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாதது. இந்நிலையில், மேக்ஸ்வெல் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் லீக் தொடரில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
அந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அடிலெய்டில் நடைபெற்ற செலிபிரிட்டி கோல்ஃப் விளையாட்டில் கலந்துகொண்டார். அன்று இரவு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, அவரது சகோதர ஷேன் லீ மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வரும் ’சிக்ஸ் அண்ட் அவுட்’ என்ற இசைக்குழுவின் இசை விருந்து நிகழ்ச்சி ஒன்றிலும் பங்குபெற்றார்.
அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், நிகழ்ச்சியின் இடையே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்குபெறும் ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. அதில் மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 'மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அவர் அணியில் சேர்க்கப்படாததற்கு அடிலெய்டு சம்பவம் காரணமல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அவர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதிகமாக மது குடித்ததால் மேக்ஸ்வெல் மீது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ராமர் கோயிலில் இன்று முதல் தரிசனம்... கட்டுக்கடங்காத கூட்டம்; ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்!
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்... இன்று கூடுகிறது அமைச்சரவை... என்னென்ன முக்கிய முடிவுகள்?
நவீன நீர்வழித் திட்டத்தின் நாயகன்... காலமானார் ஏ.சி.காமராஜ்
விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; சிக்கிய சார்பதிவாளர்... கோவையில் பரபரப்பு!